பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 மார்ச், 2011

புத்தகபூதம் பதில்கள் 12

கேள்வி நவீன கவிதைகளில் எளிமையான கவிதைகள் ஏதுமில்லையா?

ஏனில்லை நிறைய இருக்கிறது அதில் மிகவும் எளிமையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் எழுதக்கூடிய கவிஞர்களில் ஒருவர் சமயவேல் அவருடைய கவிதை ஒன்று இதோ படித்துப்பாருங்கள் இதை எழுதி பல வருடங்கள் ஆகிறது. இவருடைய அரைக் கணத்தின் புத்தகம் என்கிற கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது

பரிணாமப் பயன்பாடுகள்

பெயர் தெரியாத பூச்சி
பருப்பு டப்பாவுக்குள் இருந்தது
அதன் தாய்தந்தை யார் எதுவரை
படித்திருக்கிறது அதன் லட்சியம் என்ன
சாதனை என்ன வீட்டுப் பொறுப்பை
செவ்வனே செய்கிறதா பூர்ஷ்வாவா
கஞ்சா பிடிக்குமா
சமுகப் பிரக்ஞை உண்டா
கல்யாணம் ஆனதா லெபனான்
போர்பற்றி அதன் அபிப்ராயம் என்ன
ஒன்றும் தெரியாது
சாம்பல் நிறத்தில் வரிவரியாக
இத்தினியூண்டு மீசையுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது.

புதன், 2 மார்ச், 2011

புத்தக பூதம் பதில்கள்11

கேள்வி லிமரைக்கூ என்றால் என்ன?

லிமரிக்கும் ஹைக்கூவும் சேர்ந்த ஒரு கலப்பினக் கவிதை வடிவத்தை டெட்பாக்கர் என்பவர் முதன்முதலாக ஆங்கிலத்தில் உருவாக்கினார். ஜப்பானிய ஹைகூவின் 5,7,5 என்னும் அசையமைப்பையுடைய மூவடி எல்லையும் லிமரிக் ஓசை அமைப்பும் கொண்ட அதற்கு லிமரைக்கூ என்று பெயர். இவ்வாறு தமிழின் முதல் ஹைக்கூ நுலான சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் என்ற நுலில் ஈரோடு தமிழன்பன் கூறுகிறார்
அந்த நுலில் இருந்து சில லிமரைக்கூக்கள்

புகைபிடித்தால் இறப்பாய்
மதுகுடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்

பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன்நண்டு வகையே அதிகம்

மந்தை பிரிந்த ஆடு
முகவரி தொலைத்துவிட்டுத் தேடியது
வழியில் வந்தநரி யோடு

தாடி வளர்த்த ஈரோடு
தமிழர் பூமி முழுவதும் பரவி
மாற்றம் செய்தது வேரோடு

ஐயனார் வாளின் ஓரம்
அடடா தொட்டுப் பார்த்தால் நேற்று
பெய்த மழையின் ஈரம்



சனி, 26 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்10

கேள்வி அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா

   இப்போதும் அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் குறைந்த எண்ணிக்கையில். அவர்களில் ஒருவர்
பேயோன் என்ற பெயரில் எழுதும் எழுத்தாளர். அவர் யார் என்று இன்னும் தெரியவில்லை ஆனால் தமிழ்இலக்கிய உலகை நன்கறிந்தவர் என்பது மட்டும் உறுதி அவரது சமீபத்திய புத்தகம் திசைகாட்டிப் பறவை அதிலிருந்து சில துளிகள்

சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தை எழுத்தாளர் ஆகிவிடப்போகிறார்.

பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை துற்றாதீர்கள் உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் வேலைசெய்கிறார் தெரியாத நண்பர்கள் வேறு இடங்களில் வேலைசெய்கிறார்கள்.


டி.வி விளம்பரங்கள் அனைத்தையும் ஒரு டிவிடியில் அடைக்கவேண்டும்.அடுத்து அந்த டிவிடியை எரிக்கவேண்டும் பிறகு விளம்பரங்களின்றி டிவி பார்க்கலாம்.



தனரேகையை ஆராயும்போது ஆயுள் ரேகை மேல் ஒரு கொசு வந்து அமர்ந்தது.உள்ளங்கையால் நெற்றியில் ஓங்கி ஒரே அடி நெற்றியில் கொசு பொட்டு கவித்துவம்.

தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருடைய வீட்டு குழாயிலும் தண்ணீரை நிறுத்திவிட்டால் தமிழ இலக்கியம் செத்துவிடும் என்கிறார் நண்பர் குலை நடுங்குகிறது


புதன், 23 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்9

கேள்வி  முற்போக்கு இலக்கியம் என்கிறார்களே அது என்ன.?

இந்த சமுதாயம் இப்படியே சாதி,மத,சம்பிராதய,சாத்திர ஏற்றத்தாழ்வுடைய நிலையிலேயே நீடிக்கலாம் என்ற சமுதாயப்பார்வை ஒன்று உண்டு.
இதற்கு நேர் எதிரான பார்வை மற்றொன்று இந்த இரண்டாவது பார்வைதான் முற்போக்கானது. சமுதாய மாற்றம், முன்னேற்றம் என்பதே இன்றிருக்கும் நிலை மாறி, இந்தப்படியிலிருந்து அடுத்த படிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். இந்தப்பார்வைதான் முற்போக்குப்பார்வையாகும் இவ்வாறு சமுதாயத்தை அடுத்தடுத்த மேல்நிலைக்கு எடுத்துச் செல்வதே முற்போக்கு வாதமாகும். சமுதாய்ததைப்பற்றி எல்லா எழுத்தாளனுக்கும் ஒரு பார்வை இருக்கும் யாருடைய பார்வை சமுதாயத்தை முன்னெடுத்து செல்கிறதோ அது முற்போக்கு கண்ணோட்டம் .அதை பிரதிபலிக்கும் இலக்கியம் முற்போக்கு இலக்கியம். என்று ச, செந்தில்நாதன் தன்னுடை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற நுலில் கூறியுள்ளார்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்8

கேள்வி தமிழ்நாட்டில் இப்போது இருப்பது போல ஐயப்பன் வழிபாடு முன்பு பிரபலமாக இல்லை என்கிறார்கள் மூத்த குடிமக்கள் அது எப்போது யாரால் இங்கு பிரபலப்படுத்தப்பட்டது?


அதற்கு பெரும் பங்களிப்பு செய்தவர் பாளையம் பொன்னம்பலம் தியாகராசன் எனும் சர்.வி.டி.ராஜன் ஆவார். பெரும் நிலச்சுவானதாரும் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அதன் சார்பாக அன்றையச் சென்னை மாகாணத்தில் அமைச்சராக இருந்தவரும் சமூக அரசியல் பொருளாதார மற்றும் நீதி முதலிய நிர்வாகத் துறைகளில் மிகுந்த செல்வாக்குடைய சுற்றம் சூழல்களை உடையவருமான இவர், இந்திய விடுதலைக்குப்பிறகு அரசியல் செல்வாக்கை இழந்தார். 1952ல் மதுரை சட்டமன்றதேர்தலில் பொதுவுடமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய பி.இராமமூர்த்தியிடம் தோற்றுப்போன இவர் அதன் பிறகு தன்னுடைய சமய சமூகச் செல்வாக்கினை ஈட்டிக்கொள்ள முனைந்தார்.மதுரை அழகர் மலைக்கு மேலுள்ள அடிவாரத்தில் வைணவ அழகர் கோயில்  சிலம்பாறு எனும் இயற்கையின் நீருற்றுக்கு அருகே பழமுதிர் சோலையும் அதிலே முருகன் வேல்வழிபாட்டையும் முயன்று பிரபல்யப்டுத்திய பி.டி. இராஜன் மதுரையில் 1955 56ல் ஐயப்பன் வழிபாட்டை மக்களிடம் அறிமுகம் செய்தார். அவருடைய முன் முயற்சிகள் காரணமாகக் கட்டுப்பாடான குழுக்கள் மூலமாகத் தெரு தெருவாக ஐயப்பன் படங்கள் பூசைகள் பக்திப்பாடல்கள் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, பல ஊர்களில் இந்த வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டது.   இந்த தகவல் உள்ள புத்தகம் தமிழின் அடையாளம் பக்கம் 95ல் எழுதியவர் சிறந்த ஆய்வார்களில் ஒருவரான தி.சு.நடராசன் அவர்கள்.


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

ஈரேழு உலகங்கள் என அடிக்கடி சொல்கிறார்களே அவை எவை?


இந்து மத புராண கற்பனைகளில் இவையும் ஒன்று இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்குபதில் இதோ
ஆகாயத்தில் உள்ளதாக சொல்லப்படுகின்ற ஏழு உலகங்கள்
யூ
புவ
சுவ
மஹ
ஹந
தப
சத்ய
பூலோகத்தின் அடியில் இருப்பதாக சொல்லப்படுகிற ஏழு உலகங்கள்
அதல
விதல
குதல
ரஸாதல
தாரதல
மகாதல
பாதாள



சனி, 19 பிப்ரவரி, 2011

கொறிக்க கொஞ்சம் கவிதை 2

                                                 சூழல்

என் தாத்தாவின்
புகைப்படத்தில்
தாத்தா அமர
பாட்டி பக்கத்தில்
நின்றிருந்தாள்
என் அம்மாவின்
புகைப்படத்தில்
அப்பாவும் அம்மாவும்
சமமாகவே அருகருகே
உட்கார்ந்திருந்தார்கள்
எங்கள் புகைப்படத்தில்
நாங்கள் இருவருமே
நின்று கொண்டிருக்கிறோம்
மூன்றுமே
சட்டத்திற்குள் தொங்குகின்றன.




புத்தக பூதம் பதில்கள்

பெண்ணியம்,தலித்தியம்,பொதுவுடமை என தனித்தபிரிவைச்சார்ந்த கவிதைகள் பிரகடனமாக உள்ளது என விமர்சிக்கிறார்களே இது பற்றிய தங்கள் கருத்து என்ன?

இந்த விமர்சனத்திற்கு நட.சிவக்குமார் என்கிற கவிஞர் கூறுவதைப்பாருங்கள்
பனையோலையில்
பண்பாட்டுடைததவன் என் பாட்டன்
நீ பேசும்
பூடகமும் கவித்துவமும் எனக்கவசியமில்லை
சங்க இலக்கியம்
காவியகால காப்பிய இலக்கியம்
திராவிட இலக்கியம்
இவை எல்லாவற்றிலும்
தேடவேண்டி இருக்கிறது தொலைந்தம வாழ்க்கையை
கடந்தகால
நிகழ்கால நிசத்தையெல்லாம்
நிமிர்ந்து நின்று பேசும் நெஞ்சு எனக்கிருக்கிறது
இதனைத் தடுத்தால்
கேலிசெய்தால்
தாழ்வு மனப்பான்மையென கூறினால்
மயிரடா உன் விமர்சனம்
 வெட்டிமுறிப்புக்களம் என்ற கவிதைத்தொகுதியில் உள்ள கவிதை இது.




புத்தக பூதம் பதில்கள்

 இந்தியாவின் தலைநகர் எப்போதுமே டெல்லியாகத்தான் இருந்து வருகிறாதா?

இல்லை டெல்லி 1912 முதல்தான் இந்தியாவின் தலைநகரானது அதற்கு முன்புவரை கொல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக இருந்ததது.  1905ல் வங்கப்பிரிவினை ஏற்பட்டது அல்லவா அதன் விளைவாக கொல்கத்தாவில் அதிதீவிரவாத இயக்கங்கள் வலிமையடையத் தொடங்கியதால் பிரிட்டிஷாருக்கு அது பெரிய தலைவலியாக மாறத்தொடங்கியது. இந்த தீவிரவாதிகளின் தொந்தரவிலிருந்து தப்பிக்க தலைமையிடத்தை மாற்றலாம் என ஆலோசிக்கப்பட்டது. 1911ல் அன்றைய வைசிராய் ஹார்டின்ஜ் பிரபுவின் முடிவின்படி தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 61வது சட்டத்திருத்தின்படி டெல்லி தேசிய தலைநகர் பகுதி எனத் தகுதி பெற்றது.

புதன், 16 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

 ஒரு எம்.எல்.ஏ  எப்படி இருக்கவேண்டும்?

கொஞ்சம் ஏடாகூடமான கேள்விதான் பரவாயில்லை. ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்வதைவிட ஒரு கவிஞர் ஏற்கனவே சொல்லியிருப்பதை கூறுகிறேன், அவரே அப்படி இருந்தால் என்னாகும் என்பதையும் கூறியிருக்கிறார் பாருங்கள்

பாரதி என் எம்.எல்.ஏ
தேர்தலில் நிற்கும் போது
தெருவெல்லாம் சுற்றி வந்தார்ஹ
தேர்தலில் ஜெயித்த பின்பும்
தெருக்களை சுற்றிவந்தார்

தேர்தல் முடிந்த பின்பு
பாரதி எம்எல்ஏவோ
ஊரை மறந்ததில்லை
ஊழலில் மிதந்ததில்லை

ஜனங்களின் துயர் துடைக்க
சலித்ததே இல்லை பெரும்
பணக்காரர் பணத்தைக் கண்டு
பணிந்ததே இல்லை தன்

இனத்திற்குச் சேவை செய்யும்
இழிசெயல் இல்லை பாரதி
குணத்திற்குச் சான்று சொல்ல
கோடியில் ஒருவர் இல்லை

எம்எல்.ஏ ஆனபின்பு
எல்லா ஊர்களுக்கும்
சாலைகள் போட்டார்கல்விச்
சாலைகள் கண்டார் புது

ஆலைகள் வைப்பதற்கு
அயரா துழைத்தார் இங்கே
வேலைகள் இல்லா தோர்க்கு
வேலைகள் கிடைக்கச்செய்தார்

வங்கியில் கணக்கு இல்லை
வைப்பாட்டி ஏதும் இல்லை
பொங்கிவரும் தமிழைப்பேசி
பொருள் சேர்த்ததில்லை

தங்கரம் நீட்டி லஞ்சம்
தாவென்று கேட்டதில்லை
எம்.எல்.ஏ பாரதிக்கு
இணையாக எவரும் இல்லை

மாளிகை வாங்கவில்லை
மஸ்தான் தொடர்பு இல்லை
வேலியே பயிரை மேயும்
வித்தயைக் கற்றதில்லை

கூலிக்கு மாரடிக்கும்
கொள்கையைத் தெரிந்ததில்லை
போலியாய் வாழ்ந்ததில்லை
புகழுக்கு அலைந்ததில்லை
இப்படிப் போகும் கவிதையின் கடைசி வரிகளைப் பாருங்கள்
சரிநிகர் சமானமாக
ஜனங்கள் வாழ்தற்காக
பாரதி எம்.எல்ஏ இங்கு
பலமுறை சிறைக்குச் சென்றார்

சிறைசென்று லாபம் என்ன
சென்ற தேர்தலிலே
பாரதி தோற்றுப்போனார்
பணக்காரன் வெற்றி பெற்றான்

இந்தக் கவிதையை எழுதியவர் ஜீவபாரதி
கவிதை வெளியான ஆண்டு 1983

புத்தக பூதம் பதில்கள்

 நடிகர் எம்.ஜி ஆரின் முதல்படம் ராஜகுமாரிதானே-?

எம் ஜி ஆரின் முதல் படம் சதிலீலாவதி மற்ற நடிகர்களின் முதல்படங்களையும் சொல்கிறேன் கேளுங்கள்
சிவாஜிகணேசன்    பராசக்தி
ஜெய்சங்கர்  இரவும் பகலும்
என்.எஸ்.கிருஷ்ணன்  மேனகா
சிவக்குமார்   காக்கும் கரங்கள்
எம்,கே,இராதா   சதிலீலாவதி
ஜெமினி கணேசன்  கதாநாயகனாக பெண்
ஆர்.எஸ் மனோகர்  ராஜாம்பாள்
ரவிச்சந்திரன்  காதலிக்க நேரமில்லை
கமலஹாசன் களத்துர் கண்ணம்மா
ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்
பிரபு  சங்கிலி
கார்த்திக்  அலைகள் ஓய்வதில்லை
நாகேஷ்  நீர்க்குமிழி
விஜயகாந்த்   நீரோட்டம்
சாருஹாசன்  உதிரிபூக்கள்
மோகன்     நெஞ்சத்தைக்கிள்ளாதே
பாக்யராஜ்  16 வயதினிலே
டி,இராஜேந்தர்     ஒரு தலை இராகம்
கே,சாரங்கபாணி  ராம்தாஸ்
எம்.கே.தியாகராஜபாகவதர்    பவளக்கொடி
எம்.ஆர்.இராதா     ராஜசேகரன்
ஆனந்தபாபு   தங்கைக்கோர் கீதம்
பாண்டியன்   மண்வாசனை
பாண்டியராஜன்  அந்த ஏழு நாட்கள்
முத்துராமன்  நெஞ்சில் ஓர் ஆலயம்
வினுச்சக்ரவர்த்தி   ரோசாப்பூ இரவிக்கைகாரி
ஸ்ரீகாந்த்  வெண்ணிறஆடை
சிவச்சந்திரன்   பட்டின பிரவேசம்
வி,கோபாலகிருஷ்ணன்  அரிச்சந்திரா
சுரேஷ்  பன்னீர் புஷ்பங்கள்






செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

நீங்கள் ரசித்த பெண் கவிஞரின் காதல் கவிதையை சொல்லமுடியுமா?

சொல்கிறேன் கேளுங்கள் அந்த ஊர் ஒரு பழமையான ஊர் எப்போதும் கூத்தாட்டும் நடந்துகொண்டிருக்கும் ஊர் அந்த ஊரில் செல்வந்தர்கள் அதிகம் என்பதால் வறுமையோ அயற்சியோ இல்லை. அந்த ஊரில் துணி வெளுக்கும் தொழிலை செய்கிற ஒரு பெண் தானுண்ட இரவு உணவில் எஞ்சிய கஞ்சியிட்டு உலர்த்திய மெல்லிய ஆடையையும் பொன் மாலையும் அணிந்தவளாய் நடந்து வந்தாள். கருமையான பனை நாரினால் திரித்த பெரிய கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஊசலருகே அவள் சென்று நின்றாள். பூப்போன்ற கண்களைக் கொண்ட தோழியர் கூட்டம் ஊசலை ஆட்டிட ஆடாவதளாய் பூங்குழலியான அவள் விசும்பிச் சென்றாள் தகுதியில்லாதவர் என்னைச் சூழவுள்ளனரேயன்றி காதல் கொண்ட என் தலைமகன் வந்து ஊசலை அசைத்து மகிழும் நிலை எனக்கு வாய்க்கவில்லையே என்று  இதோ அந்த கவிதை
ஆடு இயல்விழவின் அழுங்கல் மூதுர்
உடையோர் பான்மையின் பெருங்கைதுவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொரு
வாடாமாலை துயல்வர,ஓடி,
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க,ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சிலவளைக்குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களொடு முகழீ இய
பயன் இன்று அம்ம,இவ்வேந்துடை அவையே-?..
  இதை எழுதிய பெண்கவிதாயினி அஞ்சில் அஞ்சியார். என்ன உங்கள் முகம் எதோ போல் ஆகிறது. நீங்கள் இன்றைய பெண்கவிஞர் யாரையாவது கூறுவேன் என்று எதிர்பார்த்தீர்களோ நாம யாரு எப்படி? இந்த பாடலை நான் படித்தது சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள் என்கிற ந,முருகேசபாண்டியன் அவர்கள் தொகுத்த நுலில் உள்ளது,.இது நற்றிணை 90 மருதப்பாடல்.





திங்கள், 14 பிப்ரவரி, 2011

புத்தக பூதம் பதில்கள்

கேள்வி  இப்போதைய சிறுகதைகளில் நிறைய விலைமகளிர் அதாவது பாலியல் தொழிலாளியிடம் போவதைப்பற்றி வருகிறேதே இது புரட்சி இல்லையா?


         .நீங்கள் வா.மு.கோமு சாரு நிவேதா போன்ற எழுத்தாளர்களைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் புதியது அல்ல, ஞானரதம் என்ற இலக்கியப்பத்திரிக்கை 70களில் வந்தது, அதில் செத்த பாம்பு என்ற சிறுகதை பிப்ரவரி 1970ல் வந்த சிறுகதை அதன் சுருக்கத்தை சொல்கிறேன் கேளுங்கள் அவன் இருபத்தேழு வயது இளைஞன். பெண்சுகத்தில் கற்பனையில் மட்டுமே கண்டவன். வீட்டுக்கு கலாய் பூச வந்தவனின் மகள் காமக்கொழுந்தை வளரவிட  பெண்சுகம் தேடி பஸ்ஸ்டான்ட் கடை வீதி என எங்ஙெங்கோ அலைந்து ஒரு ஆணைப்போல முகமும் சிகரெட்டும் பிடிக்கிற இந்திபேசும் பெண்ணிடம் 2  ருபாய்க்கு பேசி போகிறான், சுவரில் சாய்த்து முத்தமிடும் போதே உச்சம் அடைந்து லிப்டில் இறங்குவதுபோல துடிப்பு தாழ்ந்துவந்தது. சுவற்றில் ஒரு பாம்பு , உடனே அவள் அதை அடித்தாள் பிறகு அது செத்த பாம்பு அதை வாசலில் வீசிவிட்டு படுத்தாள். அவனால் இயங்கமுடியவில்லை ஒத்துழைக்காத உடம்போடு போனான் வந்தான் யோவ் எந்திரி என்று அவனை வெளியே அனுப்பிய அவள் நாளைக்கு பகல்ல வாங்கோ என்றாள்.வெளியில் செத்த பாம்தை மிதித்து விட்டான். பக்கெட்டில் இருந்த தண்ணீரில் காலைக்கழுவிக்கொண்டு சென்றான் என்று அந்தக்கதை முடியும், சொல்ல வந்த விக்ஷயத்தை அன்றே சொல்லிவிட்டார்களே சிறுபத்திரிக்கைகாரர்கள் இன்று என்ன சொல்வது?



ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

கொறிக்க கொஞ்சம் கவிதை 1

                                                                நீ

     ஒவ்வொருமுறையும்
      வார்த்தைத்
      துஊண்டிலை
       என்மனக்குளத்தில்
        எறிகிறபோது
        என் இரகசிய
        மீன்களில் ஒன்று
        அதில் சிக்கி
        உதிரம் கொட்டி
       தன்னுயிர்
       இழக்கிறது.

சனி, 5 பிப்ரவரி, 2011

தேகம் நாவல் விமர்சனம்

     இன்றைய ஸ்டார் எழுத்தாளர் சாருநிவேதாவின் புதிய நாவல் இது.இந்த நாவலை எந்த வித முன் பயிற்சியும் சிந்தனைப் பயிற்சியும் இல்லாதவர்கள் வாசித்தால் செக்ஸ் புத்தகம் என்றே கூறுவார்கள் அப்படித்தான் மிஸ்கினும் கூறினார். இதை வாசிக்க வாசக முதிர்ச்சி தேவை.
     உடல் அரசியல் என்கிற தனி வகைமையான கருத்தாக்கங்கள் உள்ளன. அவற்றை உள்வாங்கிக்கொள்ளாதவர்களுக்கு இது பயனற்ற பிரதி மட்டுமே.
     அது என்ன உடலரசியல் உடல் என்பது 20 வகையான புரதங்களால் ஆன உயிர்ம அமிலங்களின் தொகுதி முழுமை பெற்ற உடல்கள் எல்லாம் ஓரே மாதிரியானவை. ஆனால் அவற்றில் வேறுபாடுகள் நிலவாத சமுகங்களே பூமியில் கிடையாது.
     கறுப்பு நிறமான உடல்கள் கீழானவை, சிவப்பு வெள்ளை உடல்கள் மேலானவை. போதிய உணவு தடையின்றி பெறக்கூடிய உடல்கள் மேலானவை உணவே கிடைக்காத அல்லது உணவுக்கு உத்திரவாதமற்ற உடல்கள் கீழானவை இன்னின்ன குலத்தில் பிறந்த உடல்கள் கீழானவை இன்னின்ன குலத்தில் பிறந்த உடல்கள் மேலானவை இப்படியான பேதங்கள் தொடர்ந்து கொண்டே போகின்றன.

     இத்தகைய சமுக மதிப்பீடுகளே மனித குலத்திற்கே எதிரானவை. எனவே உடல் பற்றிய அதைக் கீழ்மைப்படுத்தும் சமுதாய மதிப்பீடுகளை உடைப்பதே உடல்மொழியின் நோக்கம். கூட்டுறவைச் சார்ந்திருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தம்முள் முகிழ்க்கும் அதிகாரத்தை தொடர்ந்து கண்காணித்துக் களைந்து கொள்வதே உடல்மொழியின் தேவை.
     இந்த அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டவை மறுக்கப்பட்டவை,புறக்கணிக்கப்பட்டவைற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உதாரணமாக உடல் உறுப்புகளில் ஒன்றான பின்பக்கப்பகுதியை பிருஸ்டம் என்ற சொல்லை ஏற்கிற சமுகம் குண்டி,சுத்து என்கிற் சொற்களை ஆபாசம் அருவெறுப்பு என மறுக்கிறது. இப்படி மொழிமீது புனிதம் கட்டமைக்கப்படுகிறது. பிருஸ்டத்தை பயன்படுத்துவோர் செம்மொழித்தமிழ்ர் சுத்தைப்பயன்படுத்துவோர் கொடுந்தமிழர் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
     இந்த நியாயமற்ற பாகுபாட்டை ஒழிக்க வழி புறக்கணிக்கப்பட்ட விலக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவைகளை அரங்கேற்றுவதுமதான். அந்த வகையில்தான் சாருநிவேதாவின் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.
     இந்த நாவல் தர்மா என்பவனைப் பகற்றிய பதிவுகள். எழுத்தாளனாக இருக்கும் இவன் பெற்ற அனுபவங்கள் இவனுடைய பாலின்பம் காதல் இவன் வதைத்த உடல்கள் இவைகளே இந்த நாவலின் கதைக்களன்
     பாலின்பம் குறித்த உரையாடல்கள் மிக முக்கியமான விவாதங்களை வாசகர்கள் முன்பு வைக்கிறது. ஒருபால் உறவினர்களின் நியாயத்தை முன்வைக்கிறது.
      இந்த நாவலின் முக்கிய நோக்கம் உடல்குறித்த கற்பிதங்கள் பொதுக்கருத்தியல் இவற்றில் விரிசலை ஏற்படுத்துவதுதான் ஆனால் இந்த நோக்கம் முழுமையாக நிறைவேறியிருக்கிறதா எனில் இல்லை என்றே எனக்குப்படுகிறது
      உடல் அரசிலை முழுமையாக முன்வைக்கும் பிரதி அதிகவாசகர்களை அடையவேண்டும் என நினைக்காது. அது தலைப்பிலிருந்தே தன் பணியைத் தொங்கும்  உதாரணம் குட்டி ரேவதியின் முலைகள் ரமேஸின் (பிரேம்) சாராயக்கடை ஆனால் இந்த நாவலோ குண்டி சுத்து என்று தலைப்பிடமால் தேகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதிலிருந்தே இதன் நோக்கம் அதிக வாசகர்களைக் கவருவதையே நோக்கமாக கொண்டுள்ளது.
      பாலியல்  உறவு குறித்த புனித அறங்களை கேள்வி கேட்காமல் பாலியல் செய்ல்முறைகளை மட்டுமே எழுதியிருக்கிறார்.
     கற்பழிப்பு பாலம் அப்படி வன்பாலுறவு செய்தவனை நசுக்கி சித்திரவதை செய்யவேண்டும் என்கிற சினிமாத்தனமான (உதாரணம் சமீபத்தில் வெளியாள ஈசன்) பழிவாங்கலுக்கு கற்பனை தீர்வையே தந்திருப்பது பழைய அறத்தை துக்கி நிறுத்துவதுதான்.
     உடல் குறித்த பலவித கருத்தாங்களை கேள்விக்குள்ளாக்க கேலிக்குள்ளாக்க முயன்றுள்ளார். யோனிமைய பாலுறவு தவிர்த்து குத பாலுறவு உடம்பை வதைத்தல் காதலும் பைத்தியமாகும் உடலும் ஒரு பால் உறவு இவற்றை முன்நிறுத்தி கதையாக்கப்பட்டுள்ளது.
     உடலின் மற்ற செயல்பாடுகளான உடல் ஒடுக்கம் உடலை பட்டினி போடவைப்பதன் மூலம் அறத்திற்கான கருவியாக மாற்றுதல் உடலை சிதற வைக்கும் வெடிகருவியாக மாற்றுதல் அதிகாரத்துக்கு கட்டுப்படும் பொம்மையாக்குதல் போன்ற பலவற்றையும் எடுத்துக்கொண்டால் நாவலின் முழுமை கூடியிருக்கும்.
     வெற்று உழைப்பையேய தந்து கொண்டிருக்கும் சாரு அவசரப்படாமல் மிகப்பொறுமையாக இந்த நாவலை செய்திருந்தால் மிகச்செறிவான உடல் அரசியலுக்கு ஆதரவான நல்ல கருவியாக இது இருந்திருக்கும். புகழ் வெளிச்சம் தன் மீது மட்டுமே குவிய வேண்டுமென்ற வெறி இப்போது இவர் மீது கவிந்திருப்பதால் இந்த நாவல் கொண்டாட்டமாக மட்டுமே சுருங்கி சரோஜததேவி வகை நுலோ என ஐயப்படுமளவு இந்த நாவல் கீழ் இறங்கிவிட்டது. தமிழ் எழுத்துலகில் தனி முன்னோடியாக பலவற்றை கவிழ்த்துக்கொட்டிய சிந்தனைப்போராளி சாரு என்பதை மறக்கமுடியாது.இந்த நாவல் என் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதே என் வருத்தம்.